நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

செப்டம்பர் 11, 2023

தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (செப். 11) காலை வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, மேல் சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், மன்னார், வவுனியா மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், சிலாபத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் கடல்பிரதேசம் மிகவும் கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.