நாட்டின் பல பகுதிகளில் மேலும் மழை
செப்டம்பர் 20, 2023மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதே வேளையில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செப். 20) எதிர்வுகூறியுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலை 1 (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. மாத்தறை தெரங்கலவில் 77 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றானது தென்மேற்கு திசையாக வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் அது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.