இராணுவத்தின் புதிய பிரதம அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு

டிசம்பர் 17, 2020

இலங்கை  சமிக்ஞை படையணியின் கேர்னல் கொமடாண்ட் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, இராணுவத்தின் 56வது பிரதம அதிகாரியாக தனது கடமைகளை இராணுவத் தலைமையகத்தில் நேற்றைய தினம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கெடெட் அதிகாரியாக1985ஆம் ஆண்டு ஒக்டோபர் 07ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர், தனது ஆரம்ப பயிற்சிகளை முடித்துக் கொண்டு இரண்டாம் லெப்டினென்டாக 1986, ஜூலை 24 ஆம் திகதி அதிகாரமளிக்கப்பட்டார்.

இராணுவத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றி வரும் சிரேஷ்ட நிலை அதிகாரியான இவர், கட்டளை,பதவிநிலை மற்றும் பயிற்றுவிப்பு நியமனங்கள் வகித்துள்ளதுடன் தற்போதைய இராணுவ வுஷு குழுவின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றார்.

மேஜர் ஜெனரல் தெமடன்பிட்டிய, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள்  கல்லூரியில் இளமாணி கற்கை நெறியினை பூர்த்தி செய்துள்ளதுடன் இவர் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முதுமாணி கற்கை நெறியினையும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ கற்கை நெறியினையும் பூர்த்தி செய்துள்ளார்.

இராணுவத்தின் 56வது பிரதம அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர்  பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகள்  கல்லூரியின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு  தமது புதிய பிரதம அதிகாரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.