கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள்
கடலோர பாதுகாப்பு படையினரால் முன்னெடுப்பு
செப்டம்பர் 27, 2023
இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கடலோர சுற்றுச்சூழல் பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை அண்மையில் முன்னெடுத்துள்ளனர். குறித்த தூய்மைப்படுத்தும் பணியானது, ஆசிய கடலோர பாதுகாப்பு தலைமைகளின் செயற்குழு அமைப்பின் (HACGAM) கடற்கரை சுத்தப்படுத்தும் தினத்திற்கு இணையாக அதன் பிராந்திய பணியகங்களினால் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை கடலோர பாதுகாப்பு படை ஆசிய கடலோர பாதுகாப்பு தலைமைகளின் செயற்குழு அமைப்பின் கடல் சூழல் பாதுகாப்பு குழுவிற்கு தலைமை தாங்குகிறது.
குறித்த தூய்மைப்படுத்தும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் இருந்து அதிகமான இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டதாக கடலோர பாதுகாப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த சுற்றாடல் பாதுகாப்பு முன்முயற்சியானது, சுற்றாடல் பாதுகாப்பிற்கான இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் அர்ப்பணிப்பையும் மற்றும் நாட்டின் கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதில் அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டினையும் வெளிப்படுத்துகிறமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தூய்மைப்படுத்தும் பணியின் போது கடற்கரைகளில் இருந்து ஏராளமான கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறான செயற்திட்டங்களின் மூலம் கடல் மாசுபாடு மற்றும் கடல் சூழலுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்கிறது.
பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற முறையற்ற முறையில் அப்புறப்படுத்தப்படும் கழிவுப் பொருட்கள் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் அவை நுண்ணிய பிளாஸ்டிக்காக உடைந்து கடல் விலங்குகளின் உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பெருமளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் கடல் சூழலுக்குள் சென்றடைகின்றன, இது கடல் மற்றும் மனித உயிரினங்களுக்கும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.