அயகம மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வேலைத்திட்டம் பாதுகாப்புச் செயலாளரினால் அங்குரார்ப்பணம்

டிசம்பர் 17, 2020

     •   இலங்கையில் 147 இடங்களில் பேரழிவு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 110 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வேலைத்திட்டங்கள்

       •   அயகம வேலைத்திட்டம் 365 நாட்களுக்குள் நிறைவுபெறவுள்ளது.

தொடர்ச்சியாக மண்சரிவு அபாயம் ஏற்படும் அயகம பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் (ஒய்வு) கமல் குணரட்ன, அயகம பிரதேசத்தில் மண்சரிவு அபாயத்தை குறைக்கும் வகையில் 418 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தை அற்குரார்ப்பணம் செய்ததுடன் அந்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

மேலும், இரத்தினபுரி கலபொட பிரதேசத்தில் 12 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கும் வகையில் 442 மில்லியன் ரூபாய் பெறுமதியான மற்றுமொரு வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

பாதுகாப்புச் செயலாளருடன், இரத்திரபுரி மாவட்டச் செயலாளர் மாலினி லொக்குபொத்தகம, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுதந்த ரணசிங்க, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஆசிரி கருணாவர்தன, அயகம பிரதேச செயலாளர் நெரன்ஞன் ஜயகொடி உட்பட அதிகாரிகள் மேற்படி இரு பிரதேசங்களையும் பார்வையிட்டனர்.

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இந்த விஜயத்தை மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர், மேற்படி இரு வேலைத்திட்டங்களையும் உரிய முறையில் நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

2017ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தத்தின் போது அயகம வீதி இரண்டாக பிளந்ததுடன் அன்று தொடக்கம் இந்த பிரதேச மக்கள் பெரும் சிரமங்களுக்க முகம் கொடுத்து வந்தனர்.

அயகம, இலங்கையின் தலைநகரிலிருந்து சுமார் 106 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இந்த நகரில் ஆரம்பகாலம் தொடக்கம் காணப்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இங்குள்ள மக்கள் முன் எச்சரிக்கையாக வீடுகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அருகிலுள்ள அயகம ஸ்ரீ கங்காராம தேவாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

2017ஆம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் இந்த பிரதேச வீதி முற்றாக மண்ணினால் மூடப்பட்டு இந்ம பிரதேச மக்களின் போக்குவரத்துக்கு பாரிய தடை ஏற்பட்டதாக இந்த நிகழ்வின் போது உரையாற்றிய தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் கருணாவர்தன தெரிவித்தார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் திட்ட பணிப்பாளர் ஆர் எம் எஸ் பண்டார இந்த வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கையில் : மண்சரிவு ஏற்படும் அபாயம், அதனால் ஏற்படும் சேதங்களை குறைத்தல் மற்றும் முகாமை செய்தல் தொடர்பான கொள்கை மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அயகம பிரதேசமானது வருடாந்தம் பெய்து வரும் தென்மேற்கு பருவப்பேச்சி மழை காரணமாக மண்சரிவு அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றன.

இதனால் மத்திய மலை நாட்டு பகுதியில் மண்சரிவு ஏற்படுவதுடன் இதன் விளைவாக உயிர் பலி, உட்கட்டமைப்புகளுக்கு மற்றும் சுற்றுச்சூழல்களுக்கு சேதங்கள் ஏற்படுகின்றன.

எனவே, இந்த வேலைத்திட்டம் மிகவும் அத்தியாவசியமானதாகும். இதனால் இந்த பிரதேச உற்பத்திப் பொருட்கள் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கின்றது.

எதிர் காலங்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையில் இந்த வேலைத் திட்டம் படிப்படியாக தரமானதாகவும் உரிய முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேற்படி திட்ட பணிப்பாளர் பண்டார பிரதேச வாசிகளுக்கு விளக்கமளித்தார். அதே போன்றே கலபொட வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்த முழு திட்டத்திற்கும் நிதியுதவி வழங்குவதுடன் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுவதாக திரு பண்டார தெரிவித்தார்.

மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் மற்றும் சமய அனுஷ்டானங்களுடன் மேற்படி திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வண. ரம்புக்பொத்த தம்மதின்ன தேரர், பொலிஸ் அதிகாரிகள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஊழியர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், பிராந்திய அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச வாசிகள் பலரும் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.