பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது
ஒக்டோபர் 08, 2023- நில்வலா ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு சிவப்பு வெள்ள எச்சரிக்கை.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தில் யக்கலமுல்ல, எல்பிட்டிய, நாகொட, காலி மற்றும் இமதூவ ஆகிய பகுதிகளிலும் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வலல்லாவிட்ட, மத்துகம மற்றும் மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர, அக்குரஸ்ஸ மற்றும் ஹக்மன ஆகிய பகுதிகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு, காலி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நில்வலா ஆற்றுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஜின், குடகங்கை மற்றும் அத்தனகலு ஓயாவிற்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.