--> -->

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் விஜயம்

ஒக்டோபர் 09, 2023

மாத்தறை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் நேற்று (ஒக்டோபர் 8) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ளன நிலையில், இராணுவத் தரப்பினர் உள்ளிட்ட நிவாரணக் குழுக்கள் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக உரிய பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மாலிம்பட மற்றும் மாத்தறை பிரதேசங்களில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ள இராணுவ உணவு பதப்படுத்தும் நிலையங்களுக்கு அமைச்சர் தென்னகோன் விஜயம் செய்ததுடன், தற்போது அங்குள்ள சவால்களையும் மதிப்பீடு செய்தார்.

குறிப்பிட்ட நிலையங்களில் தொடர்ந்து பணியாற்றிவரும் இராணுவத்தினரை அவர் உத்வேகப்படுத்தினார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஏனைய தேவைகளை வழங்குவதற்கு படையினர் ஏற்கனவே தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாத்தறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலின் போது பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நிபுன ரணவக்க, மாத்தறை மாவட்ட செயலாளர், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேசத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன், அத்துடாவ பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் வெள்ளப்பெருக்கைத் தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட மணல் மூட்டைகளையும் அமைச்சர் தென்னக்கோன் நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த விஜயத்தின் போது, கௌரவ மகிந்த யாப்பா அபேவர்தன, மாத்தறை மாவட்டச் செயலாளர், அரச நிறுவனங்களின் தலைவர்கள், 61 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.ஜே.என். ரணசிங்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் அமைச்சருடன் இணைந்து கொண்டனர்.