நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஒக்டோபர் 12, 2023வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (ஒக்.12) வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும், ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்று அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேலைகளிலும் மழை அதிகரித்து காணப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் பகவந்தலாவ பிரதேசத்தில் 105.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் ஹக்மன, பிடபெத்தர மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) 3ஆம் நிலை சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கையில் பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காணப்படும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.