நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மோசமான காலநிலை தொடரும்
ஒக்டோபர் 19, 2023வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (ஒக். 19) வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மோசமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, வடமேற்கு, தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு, தெற்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேலைகளில் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் அபாயத்தைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பிரதேசத்தில் 130.6 மிலி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும் நாளை (ஒக்.20) முதல் அடுத்த சில நாட்களில் வங்கக் கடலின் மத்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்காரணமாக குறித்த பிரதேசத்தில் ஏற்படக்கூடிய மாறிவரும் காலநிலை தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் சில பிரதேசங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசை அவ்வப்போது மாறும் நிலையில் காற்றின் வேகம் முக்கியமாக தென்மேற்கு திசையில் இருந்து வீசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, பதுளை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.