கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 4000 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 212 கிலோவிற்கும் அதிக ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஒக்டோபர் 22, 2023

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இணைந்து நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலின்படி, இலங்கை கடலோர காவல்படையின் சமுத்திரரக்ஷா என்ற கப்பலின் கடற்படையினர் காலிக்கு மேற்கே 91 கடல் மைல் (168 கிமீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்று கைது செய்துள்ளனர். குறித்த கப்பலை இன்று (2023 அக்டோபர் 22) காலை தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின் இலங்கை கடலோரக் காவல் திணைக்களத்துடன் இணைந்து கப்பலில் மேற்கொள்ளப்பட்ட உன்னிப்பான சோதனையின் போது 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சுமார் 212 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் (Crystal Methamphetamine) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை நேரில் ஆய்வு செய்வதற்காக இன்று காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் தேசிய இலட்சியத்தை அடைவதற்காக, நாட்டின் கடற்பரப்பை உள்ளடக்கி பல நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டுவரும் கடற்படையினர், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கடற்படையின் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகமும் இணைந்து நடத்திய கூட்டுப் புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலின்படி, இலங்கை கடலோர காவல்படையின் சமுத்திரரக்ஷா என்ற கப்பலின் கடற்படையினர் காலிக்கு மேற்கே 91 கடல் மைல் (168 கிமீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது 2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி மாலை, குறித்த கடற்பரப்பில் பயணித்த சந்தேகத்திற்கிடமான இந்த உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பல் கைது செய்யப்பட்டு மேலதிக சோதனைக்காக தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று (2023 அக்டோபர் 22) காலை, சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடிக் கப்பலை, உன்னிப்பாக ஆய்வு செய்தபோது, கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பைகளில் நூற்று அறுபது (160) பார்சல்களில் அடைக்கப்பட்ட 180 கிலோ 800 கிராம் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 28 பார்சல்களில் அடைக்கப்பட்ட 31 கிலோ 550 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அதில் இருந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட 212 கிலோ 350 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளின் மொத்த வீதி பெறுமதி 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 மற்றும் 53 வயதுடைய தெவுந்தர மற்றும் கொட்டேகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், பல நாள் மீன்பிடி படகு, 180 கிலோ 800 கிராம் ஹெரோயின் மற்றும் 31 கிலோ 550 கிராம் ஐஸ் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழித்தல் என்ற தேசிய இலட்சியத்தை அடைவதற்காக, கௌரவ ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிக்கும் தேசிய நோக்கத்தை அடைவதற்காக, ஒரு பொதுவான இலக்கை நோக்கி. அனைத்து புலனாய்வு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிநடத்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவரான கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இத்தகைய வெற்றிகரமான போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படையால் முடிந்தது.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன், 2023 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 15,160 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வீதி பெறுமதியான போதைப்பொருளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மீன்பிடி நடவடிக்கை என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஏனைய சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளும்.

நன்றி - www.navy.lk