சீரற்ற காலநிலையினால் பாதிப்படைந்த பிரதேசங்களின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தினர் உதவி வருகின்றனர்
நவம்பர் 20, 2023நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்படைந்த மக்களுக்கு இடையூறு இன்றி சேவைகளை வழங்குவதற்கு இராணுவத்தினர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளுக்கு உதவிவருவதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தொடர்ச்சியாக உதவி வருகின்றனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68வது காலாட் படைப்பிரிவின் 593வது பிரிகேடின் 3வது விஜயபாகு காலாட் படைப்பிரிவு மற்றும் 6வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரால் (நவம்பர் 17) அன்று புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டனர்.
பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் ஒருங்கிணைந்து வெள்ள மட்டத்தை தணிப்பதற்காக ஆனந்தபுரம் கால்வாயின் நீர் வெளியேற்றம், நிவாரணம், இடமாற்றம் மற்றும் துப்புரவுப் பணிகளிலும் படையினர் ஈடுபட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் தடையாக இருந்த பாரிய மண் மேடு மற்றும் கற்பாறைகளை அகற்றுவதற்கு தியத்தலாவ மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் அன்றைய தினம் உதவியதோடு புகையிரத போக்குவரத்தை சீரமைப்பதற்கும் உதவினர்.
மேலும், நவம்பர் 18ஆம் திகதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 4வது இலங்கை இலகுரக காலாட் படைப்பிரிவினர், சீரற்ற காலநிலை காரணமாக லக்கல - மொரகஹகந்த பிரதான வீதியில் 40வது மைல்போஸ்டில் போக்குவரத்துக்கு தடையாக இருந்த பாரிய மரத்தையும் அகற்றி போக்குவரத்தை சீரமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.