தொடர் மழையால் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம்
நவம்பர் 20, 2023வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (நவம்பர் 20) வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
கேகாலை மாவட்டத்தில் கேகாலை, கலிகமுவ மற்றும் அரநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்றாம் நிலை மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, இரத்தினபுரி, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கும் நிலை 2 மற்றும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெதுரு ஓயா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. தெதுரு ஓயா மற்றும் மஹா ஓயாவின் நீர் மட்டம் உயர்வதால் தாழ்வான பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு 22,400 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதால் வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேச செயலகப் பிரிவுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் தும்மலசூரியவில் 146.44 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.