பங்களாதேசின் 52வது படைவீரர்கள் தின விழாவில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு
நவம்பர் 22, 2023பங்களாதேசின் 52வது படைவீரர்கள் தின விழா கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று (நவம்பர், 21) இடம்பெற்றது.
இதில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அதிமேதகு தாரிக் ஆரிபுல் இஸ்லாம் வரவேற்றார்.
ஜெனரல் குணரத்ன இங்கு உரையாற்றுகையில், பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போது காணப்படும் இருதரப்பு உறவுகளைப் பாராட்டியதுடன், நீண்டகால உறவுகளை மேலும் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
அத்துடன் இரு நாடுகளின் இராணுவத்தினரிடையே நட்புறவு மற்றும் ஒத்துழைப்பின் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இரு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகள், கடற்கொள்ளையை முறியடிப்பதன் முக்கியத்துவம், இரு நாடுகளின் பாதுகாப்பைப் பாதிக்கும் பிற சர்வதேச அச்சுறுத்தல்கள், பரஸ்பர ஒத்துழைப்பு, மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரண நடவடிக்கைகளில் இருதரப்பு அறிவு பரிமாற்றம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகிவற்றையும் மேலும் நினைவு கூர்ந்தார்.
பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம் மொனிருஸ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
குறித்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய மற்றும் நேபாள உயர்ஸ்தானிகர்கள், இலங்கையிலுள்ள மாலைதீவு தூதரக பொறுப்பாளர், கடற்படையின் பிரதம அதிகாரி, பாதுகாப்பு அமைச்சின் இராணுவத் தொடர்பு அதிகாரி, இராஜதந்திரிகள் மற்றும் பல முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.