இராணுவத்தினரால் வடக்கில் சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
டிசம்பர் 07, 2023இலங்கை இராணுவத்தின் யாழ். 4வது இலங்கை இராணுவ மருத்துவப் படையனியின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் முகாம் வளாகத்தில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.
இதன்போது, 4வது இலங்கை இராணுவ மருத்துவப் படையனியின் 128 இராணுவ வீரர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் செய்ததாக இலங்கை இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முல்லைத்தீவு இராணுவப் படையினர் வவுனியா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சர்வேஸ்வரத்தின் ஒருங்கிணைப்பில் முல்லைத்தீவில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான நடமாடும் கண்வைத்திய முகாம் இராணுவத்தின் 593வது காலாட்படை படையணி வளாகத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் நிஷ்மா ராஸீக் மற்றும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய இரு வைத்தியசாலைகளின் மருத்துவக் குழுவினரும் இத்திட்டத்தின் போது இணைந்துகொண்டனர்.
இந்த நடமாடும் மருத்துவ முகாமானது கண்புரை சத்திரசிகிச்சைக்காக நோயாளிகளை பரிசோதித்ததுடன், அவர்களை சத்திரசிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் டிசம்பர் 11 ஆம் திகதி அனுமதிக்குமாறு வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது பார்வையற்ற பொதுமக்களுக்கு இராணுவத்தினரால் கண்ணாடிகளும் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.