கடும் மழை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கொழும்பு அவசர செயற்பாட்டு மையத்தில் விசேட கலந்துரையாடல்
டிசம்பர் 12, 2023நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தொடர்பான அவசரகால நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு மையத்தில் நேற்று (டிசம்பர் 11) இந்த கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது.
பதுளை மாவட்டத்தில் நிலவும் மண்சரிவு அபாய நிலைமை குறித்து கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
ஹல்தும்முல்ல கெலிபனாவெல மலையில் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் 35 குடும்பங்களை அனர்ததிலிந்தது பாதுகாப்பதற்கும் சேதங்களைத் தணிப்பதற்கும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கையை இராஜாங்க அமைச்சர் இதன்போது பாராட்டினார்.
இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் சீரற்ற காலநிலை தொடர்பான அவசரகாலநிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.