முல்லைத்தீவு, வன்னி மற்றும் யாழ். படையினர் வெள்ள நிவாரணப் பணியில்
டிசம்பர் 19, 2023கடந்த திங்கட்கிழமை (18) பிற்பகல் தொடக்கம் 48 மணி நேரத்தில் முல்லைத்தீவு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த அடைமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 109 குடும்பங்களைச் சேர்ந்த 228 பொதுமக்கள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8வது இராணுவ பீரங்கி படையணியின் படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து இராணுவ வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மண்ணகண்டல் ஆரம்ப பாடசாலையிலும் கருவலங்கண்டல் அரச பாடசாலையிலும் தங்க வைக்கப்பட்டனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்த பெரும்பாலான பொதுமக்கள் வசந்திபுரம் மற்றும் கீரணமடு கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குட்பட்ட 55வது காலாட் படைப்பிரிவின் 552 வது காலாட் பிரிகேடின் 22வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 17) பாண்டிவெட்டிக்குளம் குளத்தில் ஏற்பட்ட பிளவைச் சரிசெய்தனர்.
மேலும், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54வது காலாட் படைப்பிரிவின் 541வது காலாட் பிரிகேட்டின் 5 வது இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் திங்கட்கிழமை (டிசம்பர் 18) எலிப்புக்கடிகாவை தமிழ்ப் பாடசாலையின் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கினயதனால் மன்னார் தேவம்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் 40 மாணவர்களை கருத்தரங்கிற்கு ஏற்றிச் சென்றனர். 541வது காலாட் பிரிகேட் மற்றும் 641வது காலாட் பிரிகேடின் உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இச்சேவைக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் 9 அதிகாரிகள் மற்றும் 30 சிப்பாய்கள் தீவிரமாக பங்கேற்றனர்.
நன்றி - www.army.lk