'பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அனைவரும் மிகுந்த
அர்ப்பணிப்புடன் பணியாற்ற முயற்சிக்க வேண்டும்' - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ஜனவரி 01, 2024
புத்தாண்டின் முதல் நாளான இன்று அமைச்சின் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் இன்று (ஜனவரி 1) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் 'பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் தேசிய இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் உரையாற்றுகையில், புதிய ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், எமது சுதந்திரம் மற்றும் வாழ்வியலைப் பாதுகாத்து, தாய்நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த எமது மாவீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிப்போம். அவர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவை எமது நினைவிலிருந்து ஒருபோதும் மறைந்துவிடக் கூடாது' எனத் தெரிவித்தார்.
மகா சங்கத்தினரின் சமய அனுஷ்டானங்கள் உடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு தாய் நாட்டுக்காக உயிரி தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அமைச்சின் ஊழியர்களினால் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அமைச்சின் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.