வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு கடற்படை உதவி வழங்குகிறது
ஜனவரி 08, 2024நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலை காரணமாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை இலங்கை கடற்படையின் நிவாரணக் குழுக்கள் மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன், இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் அவர்களின் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளையும் வழங்கிவருவதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்ணியா மற்றும் சொலுவத்துவான் பிரதேசத்தின் மைலபஞ்சவெளி, திருகோணமலை மாவட்டத்தின் வெருகல், லங்காபடுன முத்துச்சேனை பிரதேசம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சோமாவதி பிரதேசத்தை சேர்ந்த பரீட்சார்த்திகள் அவர்களின் பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக சிறிய படகுகளில் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசெம்பர் 31ஆம் திகதி முதல், திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2495 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீர்ப்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய திருகோணமலை பிரதேசத்தில் உள்ள பல ஏரிகள் மற்றும் நீர்ப்பாசன வாய்க்கால்களின் அணைக்கட்டுகள் மற்றும் வான்கதவுகளை சுத்தம் செய்வதற்கும் கடற்படையினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.