மல்லாவியில் 3 பேரின் சடலங்கள் மீட்பு

டிசம்பர் 21, 2020

மல்லாவி வவுனிக்குளம் வாவியில் விழுந்த ஜீப் வண்டியில் பயணித்தவர்களில் ஒருவரை  உயிருடனும் மூவரை சடலமாகவும் படையினர் மீட்டுள்ளனர்.

அதே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் குறித்த பகுதிக்கு சென்றவேளையிலேயே, ஜீப் வண்டி தடம் மாறி  குறித்த குளத்தில் மூழ்கியது  தெரிய வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த வன்னி பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள  10வது  இலங்கை இலேசாயுத  காலாட்படை மற்றும் 3வது கொமாண்டோ ரெஜிமென்ட்டைச் சேர்ந்த படைவீரர்கள் நீரில் மூழ்கிய ஒருவரை உயிருடன் மீட்டனர்.

பின்னர், மூன்று சடலங்களும் மீட்கப்பட்டனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் குறித்த ஜீப் வண்டியில் பயணித்த  தந்தை, மகள் மற்றும் சிறுவன் ஒருவன் என அடையாளம் காணப்பட்டனர்.

உயிருடன் மீட்கப்பட்டவர் சம்பவத்தில் உயிரிழந்த தந்தையின் மகன் என இ ராணுவம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக  குளத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

65வது பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர்  ஜெனரல் டிக்கிரி திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வரகின்றனர்.