மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி
பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
பெப்ரவரி 08, 2024
மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி 8) இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் லத்தீப் ஆகியோரிக்கிடையில் விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, இராணுவ பயிற்சி, மூலோபாய கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு முன்முயற்சிகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.
மேலும், இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் நெருக்கமான உறவை வளர்ப்பதற்கு லெப்டினன்ட் ஜெனரல் லத்தீப் விருப்பம் தெரிவித்தார்.
ஜெனரல் கமல் குணரத்ன இங்கு உரையாற்றுகையில், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையில் தற்போது காணப்படும் இருதரப்பு உறவுகளைப் பாராட்டியதுடன், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான நீண்டகால உறவுகளை மேலும் பேணுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்தவும் நீண்டகால உரையாடல் மற்றும் பரிமாற்றத் திட்டங்களின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.
லெப்டினன்ட் ஜெனரல் லத்தீப், படலந்தவிலுள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் பட்டதாரி ஆவார். இவர் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக மாலத்தீவின் ஜனாதிபதி அதிமேதகு கலாநிதி முகம்மது முயிசு அவர்களினால் அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் கலந்துகொண்டார்.