இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்
பெப்ரவரி 08, 2024- தம்புள்ளையில் புதிய உயர்கல்வி நிறுவனம் நிறுவப்படவுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், இன்று (பெப். 8) இரத்மலானையிலுள்ள ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை மேற்படி பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார வரவேற்றார்.
அத்துடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலுள்ள போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
பின்னர் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உப உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) அவர்களினால் உபவேந்தர் மாநாட்டு மண்டபத்தில் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து அமைச்சருக்கு தெளிவாக விளக்கமளிப்பட்டது.
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் வழங்கும் கல்விச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், உள்ளூர் இளைஞர் சமூகத்தினருக்கு புதிய கல்விப் பாதைகளை வழங்கும் நடவடிக்கையின் மற்றுமொரு அங்கமாக குருநாகல் மாவட்டத்தில் புதிய வளாகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
‘City College of Technology’ என்ற இந்த வளாகத்தின் கிளை ஒன்று தம்புள்ளையில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், அதன் முன்னேற்றம் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக கல்விப் பணியாளர்கள் மற்றும் தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் கெடட்களுடன் இராஜாங்க அமைச்சர் சிநேகபூர்வமாக உரையாடினார்.
மேலும், பல்கலைக்கழக பிரதம அதிகாரிகள் மற்றும் பீடாதிபதிகளுடன் அமைச்சர் பல்கலைக்கழக கல்விப் பீடங்கள், அருங்காட்சியகம் மற்றும் புதிய கேட்போர் கூடத்தின் நிர்மாண வளாகங்களை அவதானிக்கும் விஜயத்தில் ஈடுபட்டார்.
அமைச்சரின் விஜயத்தின் இறுதியில், பல்கலைக்கழகத்தின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் கருத்துக்களைப் பதிவு செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இந்த சந்திப்பை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.