விமானப்படையின் 25வது சைக்கிள் சவாரி கொழும்பில் இருந்து தொடங்குகிறது

மார்ச் 04, 2024

இலங்கை விமானப்படையினர் 25வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள 'விமானப்படை சைக்கிள் சவாரி - 2024' நேற்று (மார்ச் 03) காலை காலிமுகத்திடலில் ஆரம்பமானது.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த ஐந்து நாள் போட்டிகளை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அங்குரார்ப்பணக் கொடியை ஏற்றிவைத்து ஆரம்பித்துவைத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போட்டியாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுவரும் இந்த ஆண்டுக்கான போட்டியில் இந்திய விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு பேர் கொண்ட பலம் வாய்ந்த அணியும் பங்கேற்றுள்ளது. ஆண்களுக்கான போட்டியின் முதல் கட்டமாக, போட்டியாளர்கள் கொழும்பில் இருந்து கண்டியை அடைய 104.3 கிலோமீற்றர் தூரத்தை கடக்க வேண்டியிருந்தது. ஐந்து நிலைகளின் கீழ் இயற்கை எழில் சூழ்ந்த வீதிகளில் பயணிக்கும் இந்த சைக்கிள் சவாரி மார்ச் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிறைவடையும் என விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படை மகளிருக்கான போட்டிகள் மார்ச் 07ஆம் திகதி மாங்குளத்தில் ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் நிறைவடையும் 97 கிலோமீற்றர் சவாலான தூரத்தை கடக்கவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பரிசளிப்பு விழாவுடன் 25ஆவது விமானப்படை சைக்கிள் சவாரி நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.