திருகோணமலையில் TRINEX - 24 கடற்படை பயிற்சி ஆரம்பம்
மார்ச் 05, 2024இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை கடற்படை பயிற்சி - TRINEX 24 திங்கட்கிழமை (மார்ச் 04) திருகோணமலை கடற்படைத் தளத்தில் ஆரம்பமாகி இரண்டாவது நாளாக இடம்பெறுகிறது.
இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் திறனை தொடர்ச்சியாக பேணும் நோக்கில் நடாத்தப்படும் இந்தப் பயிற்சியானது துறைமுகப் பகுதி மற்றும் கடற்பரப்பு ஆகிய இரு பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயிற்சியின் கடல் சார்ந்த பயிற்சிகள் இன்று முதல் வெள்ளிக்கிழமை (08) வரை கிழக்குக் கடற்பரப்பில் இடம்பெறவுள்ளது. இதற்காக இலங்கை கடற்படை கப்பல்களான கஜபாஹு, சௌரலா, பராக்கிரமபாகு, நந்திமித்ரா, சமுதுரா, சக்தி, ரணரிசி மற்றும் பிரதாபா ஆகியவை இணைந்துகொள்ளும். மேலும், 4ஆவது விரைவுத் தாக்குதல் புளோட்டிலாவின் விரைவுத் தாக்குதல் கப்பலின் பங்குபற்றுதலுடன் கடல் சார்ந்த பயிற்சிகள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இலங்கை விமானப்படையின் பெல்412, பெல்212 மற்றும் எம்ஐ17 ஹெலிகாப்டர்கள் உட்பட இலங்கை விமானப்படையின் விமானப் படைகளும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் என கடற்படை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
திருகோணமலை கடற்படை பயிற்சி - TRINEX 24 ஆனது கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா தலைமையில் திருகோணமலை கடற்படைத் தளத்தில் திங்கட்கிழமை (மார்ச் 04) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி மார்ச் 08ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.