மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரியை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சந்தித்தார்.

மார்ச் 06, 2024

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் அவர்களை செவ்வாய்க்கிழமை (மார்ச் 05)  மாலைதீவின் தேசிய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதித் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் இப்ராஹிம் ஹில்மி மற்றும் செயல்பாட்டு மற்றும் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம்  பிரிகேடியர் ஹசன் ஷாஹித் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டிருப்பதாகவும், தேசிய பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி வழங்குவதில் இலங்கை ஆயுதப் படைகளின் பங்களிப்பை மாலைதீவு பெரிதும் பாராட்டுவதாகவும் மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரஹீம் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் பயிற்சிகளை இலகுபடுத்தியதற்காக இராஜாங்க அமைச்சர் தென்னகோன் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் லெப்டினன்ட் ஜெனரல் ரஹீம் நன்றி தெரிவித்தார்.

இலங்கை ஆயுதப் படைகளுக்கும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படைக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை தான் மிகவும் மதிக்கிறேன் என்றும், பயிற்சியின் மூலம் இரு தரப்பினரின் திறன்களை விருத்தி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தற்போதுள்ள பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய பகுதிகளை அடையாளம் காண்பதில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டிவருவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

இராஜாங்க அமைச்சருடன் இலங்கை இராணுவத்தின் இராணுவப் பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுமித் நந்தன, மாலைதீவு வெளிவிவகார செயலாளர் பணியகத்தின் பணிப்பாளர் மெக்ஸ்வெல் கீகல், இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் விங் கொமாண்டர் சமிந்த ரணசிங்க, மாலைதீவின் தேசிய பாதுகாப்புப் படையின் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும்  கூட்டுத் தலைமையகத்தின் பணியாளர்கள் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.