இந்தியாவில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் மூலோபாய செயலமர்வில் கேர்ணல் நளின் ஹேரத்தினால் விஷேட சொற்பொழிவு

மார்ச் 21, 2024

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் திணைக்களம் (DDSS) மற்றும் மேம்படுத்துதல் மூலோபாய ஆய்வுகளுக்கான மையம் (CASS) ஆகியவற்றுடன் இணைந்து சீனா பகுப்பாய்வு மற்றும் மூலோபாயத்திற்கான மையம் (CCAS) ஏற்பாடு செய்த 3வது பாதுகாப்பு மற்றும் மூலோபாய மாநாடு இந்தியாவின் புனே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் (SPPU) சாந்த் தியானேஷ்வர் மண்டபத்தில் மார்ச் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இம் மாநாட்டில், இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் விரிவுரை ஆற்றினார்.

கேர்ணல் ஹேரத் உரையாற்றுகையில், பிராந்திய பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் இயக்கவியல் தொடர்பான இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை இலங்கை அறிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வழிசெலுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில், உலகளாவிய அதிகாரப் போட்டிகளுக்கு இலங்கை பக்கபலமாக இருக்காது, அணிசேரா வெளிவிவகாரக் கொள்கையை தொடர்வதில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு குறித்து அவர் வலியுறுத்தினார்.

இந்திய இராணுவத்தின் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் அனில் சவுகான் இந்த இரண்டு நாள் மாநாட்டை தொடங்கி வைத்தார். ஜெயதேவ ரானடே, நிதின் கோகலே ஏர் மார்ஷல் எஸ்எஸ் சோமன் (ஓய்வு), குரூப் கெப்டன் ஏ ஜே லெலே, என் சி பிபிந்திரா, நிதின் கோகலே, கலாநிதி கிரண் கார்னிக், திருமதி.நம்ரதா ஹசிஜா, கலாநிதி அல்வைட் நிங்தௌஜம், ஏர் மார்ஷல் பூஷன் கோகலே, ஏர் வைஸ் மார்ஷல் மன்மோகன் பகதூர், லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி. கலிதா, வைஸ் அட்மிரல் அனுப் சிங்கந்த் மற்றும் இராஜதந்திரி கவுதம் பம்பாவாலே ஆகியோர் இந்த அமர்வில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.