இலங்கையின் சமகால தேசிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் ஆயுதப்படைகள் சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
மார்ச் 21, 2024கொழும்பில் உள்ள பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் 'கற்கை நெறி இலக்கம் 18' மாணவர் உத்தியோகத்தர்கள் மத்தியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் புதன்கிழமை (மார்ச் 20) விரிவுரையாற்றினார்.
பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிக் அவர்களின் அழைப்பின் பேரில் கல்லூரிக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இலங்கையின் சமகால தேசிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் ஆயுதப்படைகள் எவ்வாறு சிறந்த முறையில் கட்டமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது குறித்து இதன்போது மாணவர் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பாடநெறி கட்டமைப்பின் மிக முக்கியமான அங்கமாக கருதப்படும் 'டின்னர்ஸ் கிளப்' நிகழ்வின் போது அமைச்சர் ஆற்றிய இந்த விரிவுரையானது, அவரின் தீவிர அறிவுத்திறனையும், விடயத்தில் ஆழ்ந்த அறிவையும் வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தனது உரையின் பின்னர், இராஜாங்க அமைச்சர் கல்லூரியின் பயிற்றுனர்கள், மற்றும் வெளிநாட்டு மாணவர் அதிகாரிகள் உட்பட மாணவர் அதிகாரிகளுடன் உரையாடி அவர்களுடன் தனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு சேவைகள், கட்டளை மற்றும் பதவிநிலை அதிகாரிகள் கல்லூரியின் பிரதி கட்டளைத் தளபதி உட்பட அதிகாரிகள் மற்றும் மாணவர் அதிகாரிகளின் துணைவியார்களும் கலந்து கொண்டனர்