இராணுவ வீரர்களின் நலனுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் - பாதுகாப்பு செயலாளர்

மார்ச் 21, 2024

யுத்த காலத்தில் ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கும் அவர்களது வாழ்நாள் முழுவதும் சம்பளம் வழங்குவது மற்றும் போர்வீரர்கள் மற்றும் ஊனமுற்ற போர்வீரர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்தல் போன்ற நடவடிக்கைகள் நாட்டுக்காக தனது உயிரையும், உறுப்பையும் தியாகம் செய்தவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட சில நலத்திட்டங்களாகும்.

இன்று (மார்ச் 21) கொழும்பில் உள்ள டவர் மண்டபத்தில் ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணவிரு சேவா அதிகாரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவிக்கையில், யுத்த வீரர்களின் தியாகங்களினால் எமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அமைதியான வாழ்வு கிடைத்துள்ளதாகவும், அதற்காக அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ரணவிரு சேவா அதிகாரசபையானது போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனை உறுதி செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் ஒரு சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

ரணவிரு சேவா அதிகாரசபையின் நலன்புரி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக ரணவிரு குடும்பங்களுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் தொழில் முயற்சியில் ஈடுபடுவோருக்கு ஆலோசனைகளை வழங்கும் நோக்குடன் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்முயற்சியாளர்களான மாலன் தாபரே மற்றும் டபிள்யூ எம் டி ஐ விஜேவர்தன ஆகியோர் சிறு கைத்தொழில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவருடன் இணைந்து, அலங்கார மீன் வளர்ப்பு ஏற்றுமதி, பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு வழங்கல் மற்றும் சிறு கைத்தொழில்கள் குறித்து சிறந்த விரிவுரைகளை நடத்தினர்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே (ஓய்வு) வரவேற்றார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரணவிரு சேவா அதிகாரசபையானது ஊனமுற்ற போர்வீரர்கள் மற்றும் யுத்த நடவடிக்கையில் இறந்த குடும்பங்களின் மனநிலை மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது.

யுத்தத்தின் போது காயமடைந்த மற்றும் ஊனமுற்ற ஆயுதப்படை மற்றும் பொலிஸ் திணைக்கள உறுப்பினர்களின் மறுவாழ்வு, செயற்கை உறுப்புகள், சக்கர நாற்காலிகள், கண்ணாடிகள் அல்லது காது கேட்கும் கருவிகள் வழங்குதல் அத்துடன் வீடுகள், நிலங்கள், நிதி உதவி, சலுகைக் கடன்கள் வழங்குதல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கான தொழில்நுட்ப அறிவு வழங்குதல் ஆகியவை ரணவிரு சேவா அதிகாரசபையினால் முன்னெடுத்துச் செல்லப்படும் திட்டங்களாகும்.

இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதிகள், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவை அதிகார சபையின் பிரதித் தலைவர் மற்றும் அதன் பிராந்திய பிரதிநிதிகள், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.