பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கான இரசாயன ஆயுதங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

மார்ச் 26, 2024

பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்தைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகளுக்கு உணர்த்துவதற்காக இரசாயன ஆயுதங்கள் மாநாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் தலைமையில் இன்று (மார்ச் 26) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

மேற்படி விழிப்புணர்வு நிகழ்வானது பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் விருந்தினர் பேச்சாளராக அமெரிக்க குடிமக்கள் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுக்கரு விடயங்கள் தொடர்பான நிபுணரான கலாநிதி ரோஹன் பி. பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தேசிய அதிகாரசபையின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் (கலாநிதி) ரவி ரணசிங்க, ஹோமாகம நீர் பராமரிப்பு மற்றும் இரசாயன சேமிப்பு தொழிற்சாலை மற்றும் கந்தானை இரசாயன தொழிற்சாலை ஆகியவற்றில் ஏற்பட்ட தீ போன்றவற்றை மேற்கோள் காட்டி அண்மைக்காலமாக இலங்கையில் இரசாயன அபாயம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதை இதன்போது சுட்டிக்காடினார்.

ஜனாதிபதியின் ஆலோசனைகளின்படி, தேசிய பாதுகாப்பு இரசாயனச் சட்டம் மற்றும் இரசாயனங்கள் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்கான ஒன்லைன் அமைப்பு (CM&RS) ஆகியவற்றை உருவாக்க இரசாயன ஆயுத மாநாட்டை செயல்படுத்துவதற்கான தேசிய ஆணையம் எடுத்த முயற்சிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

கலாநிதி ரொஹான் பி பெரேரா அவர்களின் விரிவுரையின் போது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் பேரழிவு ஆயுதங்கள் பெருகுவதைத் தடுப்பதற்கான முக்கியமான தேவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அரசு சாரா நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வர்த்தகத்தின் உலகமயமாக்கல் ஆகியவற்றுடன், இந்த இரட்டை பயன்பாட்டு பொருட்கள் தவறானவர்களின் கைகளில் விழும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவற்றின் பெருக்கத்தை எதிர்கொள்ள வலுவான நடவடிக்கைகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், இவ்வாறான நடவடிக்கைகளில், ஒழுங்குமுறையான செயல்முறைகளை மேம்படுத்துவது மற்றும் தரத்தை உயர்த்துவதற்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் வர்த்தக ஒழுங்குமுறை அமைப்புகளால் இரசாயனங்களைப் பயன்படுத்தும் தொழிலதிபர்களை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இராணுவம் மற்றும் விமானப்படையின் தளபதிகள், அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த திருமதி சாரா வெல்ஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.