2021இல் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்த விரிவான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் - பாதுகாப்பு செயலாளர் உறுதியளிப்பு
டிசம்பர் 22, 2020நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் (2021) மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) இன்று (டிசம்பர், 22) தெரிவித்தார்.
மேலும், "பொது மக்களால் இரகசியமாக தெரிவிக்கப்பட்டு வரும் தகவல் மூலமாக சட்டவிரோத போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுவதனால் சமீபத்தில் போதைப் பொருட்களின் இருப்பு குறைந்து வருகின்றது. இதன் காரணமாக அவற்றின் விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டிருப்பது அறியக்கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் "பாதாள உலக மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் ஒரே குழுக்களினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என குறிப்பிட்ட அதேவேளை, போதைப் பொருள் மூலம் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 59 மில்லியன் ரூபா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக விளக்கமளித்த அவர், " சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்ற போதிலும், நாம் கடந்த காலங்களில் பாதாள உலக மற்றும் போதை பொருள் கடத்தலுக்கு எதிராக தொடங்கிய போராட்டத்தை நிறுத்தவில்லை" என குறிப்பிட்டார்.
பாதாள உலக நடவடிக்கைகளில் அவர்கள் தொடர்ந்தும் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.