ஓய்வுபெற்ற போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்கான மேலும் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு தயாராக உள்ளது
ஏப்ரல் 07, 2024- ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்களின் நலன்கள் மற்றும் அவர்கள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல் நிலைகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இராணுவ கஜபா படைப்பிரிவில் வைத்து கேட்டரிந்து கொண்டார்.
சேவையில் இருந்து ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பங்குபற்றும் நிகழ்வு ஒன்று வன்னி பாதுகாப்புப் படையினால் சனிக்கிழமை (ஏப்ரல் 06) இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
அவர்களின் நலன் மற்றும் நிர்வாக ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் நிலைகள் குறித்து கேட்டரிந்து, அவைகளை நிவர்த்தி செய்வதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை வன்னி பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார வரவேற்றார்.
இராணுவத் தலைமையகத்தின் ஏழு வெவ்வேறு பணிப்பாளர்களின் கீழ் உதவி மையங்கள் நிறுவப்பட்டன, இது போர் வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்கள் தேவைகளை முன்வைத்து அதற்கு தீர்வு காண வசதியாக இருந்ததமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் போது உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூர்ந்ததுடன், அவர்கள் தேசத்திற்காக ஆற்றிய சேவைகளையும் பாராட்டினார்.
முப்படையினரால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து அவர் இதன்போது எடுத்துரைத்தார்.
நாட்டிற்காகவும், தேசத்திற்காகவும் பல தியாகம் செய்தவர்களின் நலனை நாம் உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும். அத்துடன் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள், ரணவிரு சேவா அதிகாரசபை என்பன இணைந்து ஏனைய பொது நிர்வாக முகவர்களுடன் இணைந்து சுகாதாரம், பொதுநிர்வாகம், வங்கி மற்றும் இதர சேவைகளின் உதவிகளை கோரும் போது போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள 'உறுமய' காணி உறுதி வழங்கும் திட்டத்தின் கீழ் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நேரடியாகவும் தங்களின் பிரச்னைகளை முன்வைக்கவும், கருத்து தெரிவிக்கவும் இதன்போது வாய்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த மானகே, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், பெருந்திரளான போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.