பங்களாதேஷில் நடைபெற்ற பிராந்திய செயலமர்வில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கேர்ணல் நளின் ஹேரத்தினால் விஷேட சொற்பொழிவு.

ஏப்ரல் 29, 2024

"தெற்காசியாவிலிருந்து தொழிலாளர் புலம்பெயர்வோர் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள்" எனும் தலைப்பிலான பிராந்திய மாநாடு ஏப்ரல் 23ஆம் திகதி பங்களாதேஷில் இடம்பெற்றது.

இம் மாநாட்டில், இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் மேற்பார்வைப் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் விரிவுரை ஆற்றினார்.

தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு மற்றும் அரசியல் உரையாடல் குறித்த ஆசிய நிகழ்ச்சித் திட்டமான கொன்ராட் அடினாவர் ஸ்டிஃப்டுங் (KAS) ஆகியவற்றுடன் இணைந்து பங்களாதேஷின் சர்வதேச மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் இம் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தது. பங்களாதேஷின் சர்வதேச மற்றும் மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் மற்றும் தெற்காசிய சிந்தனைக் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் அழைப்பின் பேரில் கேர்ணல் ஹேரத் இந்த மாநாட்டில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் பிரதமரின் பொருளாதார விவகார ஆலோசகர் கலாநிதி மஷியுர் ரஹ்மான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில், தெற்காசியப் பொருளாதாரத்திற்கு தொழிலாளர் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து நட்புடன் பணியாற்றுவதற்காக பங்களாதேஷ் ஆர்வமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இம் மாநாட்டில் கலந்து கொண்ட புகழ்பெற்ற உள்ளூர் மற்றும் சர்வதேச பேச்சாளர்கள் தெற்காசியாவில் இருந்து தொழிலாளர் இடம்பெயர்வின்போது ஏற்படும் சவால்களை எடுத்துரைத்ததுடன், புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பெறுவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினர்.

இங்கு உரையாறிய கேர்ணல் ஹேரத் அவர்கள் தெற்காசியாவில் தொழிலாளர் இடம்பெயர்வின்போது இலங்கையில் ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பாதுகாப்பான தொழிலாளர் இடம்பெயர்வானது சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியம் குறித்து வலியுறித்தினார்.

குறித்த இம்மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய புலம்பெயர்ந்தோர் நலன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கைருல் ஆலம் சிறப்புமிக்க அறிவுரைகளை வழங்கினார்.

பல்வேறு அமைச்சகங்களின் சிரேஷ்ட அதிகாரிகள், இராஜதந்திரிகள், சிரேஷ்ட சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள், ஊடகங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பீடங்கள் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.