புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஏப்ரல் 30, 2024

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஃபஹீம்-உல்-அஸீஸ் (ஓய்வு) இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல் 30) இடம்பெற்றது.

இன்று பிற்பகல் பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரை ஜெனரல் குணரத்ன வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் நியமனம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நெருங்கிய நட்புறவை மேலும் வலுப்படுத்த ஜெனரல் குணரத்ன விருப்பம் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பரஸ்பர பொறுப்புகளை மேம்படுத்தல் மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பது தொடர்பாகவும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினர்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் பாரூக் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.