பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொமாண்டோ படைப்பிரிவின் தலைமையகத்திற்கு விஜயம்

மே 06, 2024

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (மே 06) கணேமுல்லையில் உள்ள இலங்கை இராணுவ கொமாண்டோப் படைப்பிரிவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.

கொமாண்டோ ரெஜிமென்ட் தலைமையகத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை கொமாண்டோப் படைப்பிரிவின் கேர்ணல் மேஜர் ஜெனரல் சானக ரத்நாயக்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கொமாண்டோப் படைப்பிரிவு குறித்த விளக்கக்காட்சியில் இராஜாங்க அமைச்சர் பங்கேற்றதுடன், படைப்பிரிவின் தற்போதைய நிர்வாகப் பணிகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் அமைச்சருக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், அமைச்சர் தென்னகோன் கொமாண்டோ ரெஜிமென்ட் வளாகத்தில் மீள் புனரமைக்கப்பட்ட விஹாரை அறையை திறந்து வைத்ததுடன், இராணுவ வீரர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொமாண்டோ வீரர்களின் திறமைகள் மற்றும் செயல்பாட்டு தந்திரங்கள், விதிவிலக்கான சண்டை நுட்பங்கள், விலங்குகளை கையாளுதல், ரெப்ளிங் பயிற்சி, பணயக்கைதிகள் மீட்பு மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் ஆகியவை தொடர்பான பயிற்சி கண்காட்சிகளும் இதன்போது இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் படைப்பிரிவின் கேர்ணல் ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் கொமாண்டோ படைப்பிரிவின் விருந்தினர் புத்தகத்தில் அமைச்சர் தென்னகோன் தனது கையொப்பத்தையும்  இட்டார்.