நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற, மருத்துவ காரணமாக ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் விசேட வேலைத்திட்டம்
மே 11, 2024ஓய்வுபெற்ற, மருத்துவ காரணமாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் யுத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்ச்சி இன்று (மே 11) 53 ஆவது காலாட்படை பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றார்.
இராணுவ அதிகாரிகள் அதன் பல்வேறு பணிப்பாளர்களின் கீழ் இயங்கும் உதவி மையங்களை நிறுவி, சேவை பணியாளர்கள் மற்றும் யுத்த வீரர்களின் குடும்பங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கவும், தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகளை பெறவும் உதவியது.
இதன்போது உரையாற்றிய அமைச்சர் தென்னக்கோன், எமது தாய்நாட்டின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக யுத்தத்தின் போது படைவீரர்கள் துணிச்சலாக ஆற்றிய உன்னத தியாகங்களையும் அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பங்கள் வழங்கிய அர்ப்பணிப்பையும் மிகவும் பாராட்டினார்.
கடமையில் இருந்தும் வெளியேயும் தேசத்திற்கு அயராது சேவை செய்த இராணுவ வீரர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள், ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் போர்வீரர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.
தற்போது அமுல்படுத்தப்படும் 'உறுமய' இலவச காணி உறுதி வழங்கும் திட்டத்தில் போர்வீரர் குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து, சேவைகளைப் பெற வந்தவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தங்களின் குறைகளை தெரிவித்தனர். மற்றுமொரு நலன்புரி முயற்சியாக இராணுவ சேவா வனிதா பிரிவு இந்த நிகழ்வின் போது அந்த சேவையாளர்கள் மற்றும் போர்வீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.
பாதுகாப்புப் படைத் தளபதி-மத்திய மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே, இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட, 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷானக ரத்நாயக்க, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் ஏராளமான சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.