--> -->

15ஆவது தேசிய போர்வீரர் ஞாபகார்த்த தின நிகழ்வு
பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது

மே 19, 2024
  • போர்வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து தேசத்தின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் 15வது தேசிய போர்வீரர் ஞாபகார்த்த தின பிரதான நிகழ்வு இன்று (மே 19)இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கெளரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் தூபிக்கு அருகில் நடைபெற்றது.

தாய்நாட்டின் சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், அமைதி மற்றும் ஒற்றுமையின் சகாப்தத்தை ஏற்படுத்துவதற்கும் துணிச்சலான போர்வீரர்கள் செய்த உயர்ந்த தியாகங்களை நினைவுகூரும் இந்த தேசிய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறது.

முப்பது வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டை ஒடுக்கிய பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்த வெற்றிப் போருக்கு தன்னலமின்றி, சலிக்காது போரில் கலந்துகொண்டு அங்கவீனமுற்ற போர் வீரர்கள் ஊன்றுகோல்களிலும் மற்றும் சக்கர நாற்காலிகளிலும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்தபோது, அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை என மொத்தமாக 28,619 படை வீரர்கள் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளதுடன் இருபத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட போர்வீரர்கள் அங்கவீனமுற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ மரபுக்கு அமைவாக இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் போர் வீரர்களின் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக போரிட்ட வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டதுடன், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் உட்பட அங்கிருந்தவர்கள் போர்வீரர்களை பெருமையுடனும் நன்றியுடனும் நினைவு கூர்ந்தனர்.

போர்வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களின் நலனைக் கவனிக்கும் அரச நிறுவனமான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த பிளீட் வசந்த கரன்னாகொட, மார்ஷல் ஒப் த ஏர்போஸ் ரொஷான் குணதிலக, பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், ஏனைய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்புக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், முன்னாள் முப்படைத் தளபதிகள், ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர், போர்வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் போர்வீரர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் இன்று போன்ற ஒரு நாளில் பயங்கரவாதப் போர் முடிவுக்கு வந்ததில் இருந்து நமது நாடு அமைதி, ஒற்றுமை மற்றும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் மற்றொரு ஆண்டில் நுழைகிறது. ஒற்றுமையுடனும் உறுதியுடனும் நமது தாய்நாட்டை மகத்துவமிக்கதாக மாற்ற அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம்.