ஓய்வுபெற்ற படைவீரர்கள் அரச வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்

மே 20, 2024

எமது தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடி உயிர் தியாகம் செய்த ஆயுதப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும், ஓய்வுபெற்ற பாதுகாப்பு ப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அரச மருத்துவமனைகளில் இருந்து சுகாதார வசதிகளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிகிறது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வுகளில் படைவீரர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளில் இந்த விடயம் முதன்மையானது.

போரின் போது மற்றும் போர் முடிவடைந்த சில ஆண்டுகளாக, இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது சமூக ஏற்றுக்கொள்ளல் ஒரு உயர்ந்த மட்டத்தில் இருந்தது. ஆனால் இன்று அது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நாட்டில் யுத்தம் இருந்ததை கூட சிலர் மறந்துவிட்டனர்.

குறிப்பாக சுகாதாரத் துறையில் சில படைவீரர்கள் அரச வைத்தியசாலைகளில் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும்போது சக்கர நாற்காலிகளிலும் மற்றும் ஊன்றுகோள்களிலும் காத்துநின்று தங்களுக்கு தேவையான சிகிச்சைகளைப் பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

சில சமயங்களில் தூரப் பிரதேசங்களில் இருந்து கொழும்பு அல்லது வேறு முக்கிய நகரங்களுக்கு சிகிச்சைக்காக வரவேண்டியுள்ளதுடன், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அங்கவீனமான போர்வீரர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதன் மூலம் மேலும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

மேற்படி நிலைமைகளை கவனத்தில் எடுத்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் சுகாதார அமைச்சர் கௌரவ டாக்டர் ரமேஷ் பத்திரன அவர்களை இன்று (மே 20) சுகாதார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

நாட்டு நலனுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினர், ஓய்வுபெற்ற போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு மருத்துவமனைகளில் சுகாதார வசதிகள் கிடைப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் சுகாதார வசதிகளைப் பெறுவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் 'சுவவிரு அட்டைகளை' மீண்டும் செயற்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.