இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிய தலைமையக கட்டிடத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க திறந்து வைத்தார்
மே 22, 2024இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலைமையக கட்டிடம் இன்று (மே 22) பத்தரமுல்ல அக்குரேகொடவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று காலை நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு) வரவேற்றார். அதனைத்தொடர்ந்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி விக்ரமசிங்க, புதிய கட்டிடத்தை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி விக்கிரமசிங்க, பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றுகையில் படைவீரர்களின் சேவைகளைப் பாராட்டியதுடன், அவர்களின் நலன் மற்றும் நிர்வாகத் தேவைகளை மேம்படுத்துவதற்கு புதிய தலைமையக வசதி உதவும் எனத் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலாளரின் சிறப்பு ஊக்குவிப்பு மற்றும் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என மேலும் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில் ‘உறுமய’ திட்டத்தின் கீழ் ரணவிரு கிராமங்களில் காணி உரிமைக்கான சட்டப் பத்திரங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
266 பேர்ச்சஸ் நிலப்பரப்பில், 10,032 சதுர அடி மொத்தப் பரப்பளவு கொண்ட இந்த இரண்டு மாடிக் கட்டிடத் தொகுதிக்கான நிர்மாணப்பணிகள் கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்கு அருகில் ஆரம்பித்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கட்டிடமானது ரூபா.60 மில்லியன் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதுடன் இதற்கான கட்டுமானப் பணிகள் முப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், முன்னாள் தளபதிகள், இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.