பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது
மே 28, 2024
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக தற்போது நாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய நிலை மேலும் தொடரும்.
மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும், மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் மிக பலமான காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (மே 28) பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதினால் சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கையில் ஈடுபடுவோர் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அலைகள் (சுமார் 2.5 மீ – 3.0 மீ) உயரம் (இது நிலப்பரப்புக்கானது அல்ல) அதிகரிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்பிட்டியில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அண்மித்த கரையோர கடற்பரப்புகளில் அலைகள் உயரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
அத்துடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 2ஆம் நிலை (ஆம்பர்) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், களு, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளின் பல கிளை நதிகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் காரகலவில் இருந்து 143.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.