--> -->

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் தலைமையில் போர்வீரர் குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை ஆராயும் நிகழ்ச்சி திட்டம்

ஜூன் 01, 2024
  •  தாய்நாட்டின் அமைதிக்காக தம் இன்னுயிரை தியாகம் செய்த மற்றும் காயங்களுக்கு உள்ளான போர்வீரர்களின் சேவைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் தியாகங்கள் என்றென்றும் எங்கள் நினைவில் இருப்பதுடன் அவர்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்வின்போது  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வு தியத்தலாவ இராணுவ தொண்டர் படை பயிற்சிப் பாடசாலையில் இன்று (ஜூன் 01) இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன் அவர்களை பாதுகாப்பு படைகளின் (மத்திய) தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

ஓய்வுபெற்ற சேவையாளர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்கள் தங்கள் குறைகளை முன்வைப்பதற்காக இராணுவ அதிகாரிகள் அதன் ஏழு இயக்குநரகங்களின் கீழ் உதவி மையங்களை நிறுவியதுடன் குறித்த இராணிவ வீரர்கள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும்  பிரச்சினைகளை இதன்மூலம் நிவர்த்தி செய்துகொண்டனர்.

அங்கு உரையாறிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், போரின் போது மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அளப்பரிய தியாகம் மற்றும் தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக போராடிய எமது வீரமிக்க போர்வீரர்களின் உன்னத சேவையை பாராட்டினார்.

மேலும், ஓய்வுபெற்ற போர்வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களுக்கு அரச வைத்தியசாலைகளில் முன்னுரிமை அடிப்படையில் சேவைகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் கெளரவ ரமேஷ் பத்திரன அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அரச வங்கிகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான உத்தேச மானியக் கடன் திட்டம் குறித்து அவர் விளக்கமளித்ததுடன், இது தொடர்பாக இலங்கை வங்கியின் தலைவருடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், காணிக்கான அனுமதிப் பத்திரம் வழங்கும் உறுமய திட்டத்தின் கீழ் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காணி வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தென்னகோன் தெரிவித்தார். ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக எதிர்காலத்தில் அந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் வெளிநாட்டு வேலைகளுக்கு பணியாளர்களை அனுப்பும் போது ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை ஒதுக்கீடு வழங்குவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தென்னகோன் மேலும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சரின் உரையைத் தொடர்ந்து, சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தந்தவர்கள் தமது குறைகளை அமைச்சர் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் முன்வைப்பதற்கும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் இதன்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட மேலதிக செயலாளர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள், பெருந்தொகையான போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.