இராஜாங்க அமைச்சர் தென்னகோன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்.
ஜூன் 02, 2024பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (ஜூன் 02) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் ஏனைய தேவைகளை வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாவட்ட செயலகங்கள் மூலம் நிவாரண நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகள், முப்படையினர், பொலீஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் இதன்போது உரிய தரப்பினருக்கு எடுத்துரைத்தார்.
மேலும், நிவாரண மையங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
பாதுகாப்புப் படைத் தளபதி (மேற்கு) மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ, இரத்தினபுரி மாவட்ட அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர்கள், மாவட்ட பிரதி பிரதம செயலாளர் – நிர்வாகம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், மாகாணக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர், மின்சார அத்தியட்சகர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அதிகாரி, தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய அரச அதிகாரிகள் இந்த கலந்துரையாடலின் போது கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், இன்று மதியம் 12 மணிவரையிலான காலப்பகுதிக்குள் 23 மாவட்டங்களில் 261 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 51895 பேரும் 13584 குடும்பங்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், இருவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட 388 குடும்பங்களைச் சேர்ந்த 1468 பேருக்கு தங்குமிடங்களை வழங்குவதற்காக 25 நிவாரண மையங்கள் தற்போது இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
களுத்துறை, கொழும்பு, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் வெள்ளத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதாகவும், நேற்று சில பகுதிகளில் 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
நிவாரணப் பணிகளுக்காக முப்படைகள், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், அனர்த்த நிவாரண உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து பொது சேவை உத்தியோகத்தர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்ச உதவிகளையும் நிவாரணத்தையும் வழங்குவதற்கும் தயார் நிலையில் உள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், படகுகள் மூலம் கடற்படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றுவதற்கும் அவர்களுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கும் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். நிவாரண நடவடிக்கைகளுக்காக விமானப்படை மூன்று ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவைகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட செயலகங்கள் ஊடாக நிவாரணம் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தென்னக்கோன் மேலும் தெரிவித்தார்.