இலங்கை இராணுவம், கடற்படையினர் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைககளில் மும்முரம்

ஜூன் 03, 2024

தொடர்மழை மற்றும் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் பல மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஈடுபடுத்தியுள்ளன.

அயகம (கிரியெல்ல), கலுதுரு ஓயா (கிரியெல்ல), தெஹியோவிட்ட (தல்துவ), மொரவக, தவலம, திஹகொட, நெலுவ, பத்தேகம மற்றும் திவித்துராவ ஆகிய பகுதிகளில் இராணுவ நிவாரணக் குழுக்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி மாவட்டத்தின் தவலம மற்றும் நாகொட, மாத்தறை மாவட்டத்தில் மாலிம்படை, அக்குரஸ்ஸ, பனதுகம மற்றும் கம்புருபிட்டிய, பாலிந்தநுவர, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் வெலிபென்ன, கடுவெல, பகுதிகளில் 33 கடற்படை வெள்ள நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கும் அவர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சிறிய படகுகளைப் பயன்படுத்தி கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மேலும் 60 நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி (ஜூன் 03) கடற்படை நிவாரணக் குழுக்கள் 36 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளன.

இராணுவம் அதன் யூனிகார்ன்  கனரக வாகனங்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஷேட மீட்பு குழுக்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அக்குரஸ்ஸ, மாலிம்பட, நெலுவ மற்றும் சாலாவ பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்காக இராணுவப் படையினர் சமையல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளை, பாதுகாப்பான குடிநீரை வழங்கவும், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று இராணுவம் கூறுகிறது.