--> -->

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கப்படும் - பாதுகாப்பு இராஜங்க அமைச்சர்

ஜூன் 04, 2024

சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 262 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021பேர் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 26பேர் உயிரிழந்தும் 41 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி 2368 குடும்பங்களைச் சேர்ந்த 9248பேர் 116 பாதுகாப்பான மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (ஜூன் 04) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் அரச அதிகாரிகள், முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கிராம குழுக்களின் ஊடாக செயற்படுத்தப்பட்ட நிவாரண குழுக்களின் உறுப்பினர்கள், இது தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர்களின் சேவைகள் பாராட்டப்பட வேண்டும் என்றும்  அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை ஜனாதிபதி விசேட வர்த்தமானி மூலம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 24 மணி நேர அவசர அவசர தொலைபேசி இலக்கமான 117க்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்கின்றன.

 மேலும், அனர்த்த மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளுக்கு படகுகள், யூனிகார்ன் வாகனங்கள், WMZ வாகனங்கள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் எல்லா நேரங்களிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இரத்தினபுரி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் எதிர்கால வெள்ள அபாயங்களைக் குறைப்பதற்கான செயல்திட்டங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களாலும், சுற்றுச்சூழல் குழுக்களின் தலையீடுகளாலும், அந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பான நிரந்தர தீர்வு காண்பதன் முக்கியத்துவத்தையும் தனது உரையின் போது வலியுறுத்தினார்.

மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்திடம் உள்ள தொழில்நுட்பக் கருவிகளில் போதியளவு இல்லாத போதிலும், எமது வளங்களைப் பயன்படுத்தி மிகவும் துல்லியமான வானிலை அறிக்கைகளை வெளியிடுவதுடன் புதிய திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.