பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முன்முயற்சியின் கீழ், ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது
ஜூன் 05, 2024ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் குறித்து முப்படை வீரர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் நேற்று (ஜூன் 04) இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் தென்னகோன் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவிப்பது தொடர்பான வேலைத்திட்டம் இலகுவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விருப்பம் தெரிவித்துள்ளது.
இதன் ஆரம்ப கட்டமாக இஸ்ரேலில் குறிப்பிட்ட அளவு கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர்.
வெளிநாட்டவர்களுக்கு அரச வங்கிகள் மூலம் சலுகை வட்டி விகிதத்தில் கடன் வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இப்பணிகளுக்கு அனுப்ப இராணுவத்தைச் சேர்ந்த 67 பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கடற்படை மற்றும் விமானப்படையில் இருந்தும் உரிய நபர்களை தெரிவுசெய்ய குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், 44 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் தெரிவு செய்யப்படுவதோடு, அவர்கள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக குறுகிய பயிற்சிகளை மேற்கொண்டு அவர்களால் நடத்தப்படும் பரீட்சைக்கு முகம்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.