ஐக்கிய நாடுகள், சர்வதேச அரச சார்பற்ற மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெள்ள நிவாரண உதவிகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி

ஜூன் 05, 2024

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள், சர்வதேச அரச சார்பற்ற மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இன்று (ஜூன் 05) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.

முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் ஏனையவர்களின் ஒருங்கிணைப்புடன் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய காலநிலையின் நிலைமைகள் ஆகியன குறித்து இராஜாங்க அமைச்சர் ஐக்கிய நாடுகள், சர்வதேச அரச சார்பற்ற மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு இதன்போது விளக்கமளித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள், சர்வதேச அரச சார்பற்ற மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்காக அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர அனர்த்த நிலைமைகளுக்கு பின்னரான புனரமைப்பு மற்றும் மீள்கட்டமைப்பு தொடர்பாக இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், நிவாரணப் பணிகளுக்காக தங்களின் உதவி மற்றும் ஒதுக்கீடுகளை அதிகரித்து வழங்குமாறும் இதன்போது குறித்த பிரதிநிதிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, வெள்ளத்தால் சேதமடைந்த பாடசாலைகள் மற்றும் வீடுகளை புனரமைக்கவும், தங்குமிடங்களில் தஞ்சமடைந்துள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் தேவையான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய நாடுகள், சர்வதேச அரச சார்பற்ற மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் இது தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்க இதன்போது விருப்பம் தெரிவித்தனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள், யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், செஞ்சிலுவை சங்கம் மற்றும் வேர்ல்ட் விஷன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.