வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முன்னேற்றம் மற்றும் மேலதிக நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை
ஜூன் 05, 2024தென்மேற்கு பருவமழையினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் தேவையான மேலதிக நிவாரண நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இன்று (ஜூன் 05) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.
உள்நாடு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ராஜிகா விக்கிரமசிங்கவும் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவதற்கும், போக்குவரத்து பாதைகள் தடைசெய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உலர் உணவுகளை வழங்குவதற்கும் 33% அதிகரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த ஒதுக்கீடுகள் எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகவும் விரைவாகவும் கிடைக்கச் செய்வது என்பது தொடர்பான விடயங்கள் மற்றும் பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார வசதிகள் குறித்தும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், பாதுகாப்பான நிலையங்களில் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவின் ஊட்டச்சத்து தரம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, முக்கிய உணவுக்கு கூடுதலாக ஒரு நாளைக்கு இரண்டு முறை தேநீர் மற்றும் இரண்டு பால் தேநீர் குழந்தைகளுக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கமான 117 ஊடாக பெறப்படும் அழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எந்தவொரு அவசர நிலை குறித்தும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகளுக்கு அவசர இலக்கத்தின் ஊடாக தெரிவித்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள், மின்சார சபை, பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சுகாதார பிரிவினர், பொது நிர்வாக சேவை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.