முப்படைகளின் இராணுவ பயிற்சி பாடத்திட்டத்தில் ஆட்கடத்தல் பாடத்தையும் அறிமுகப்படுத்த தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு திட்டமிட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர்
ஜூன் 08, 2024- எல்லைப் பாதுகாப்பிலும், எல்லை தாண்டிய ஆட் கடத்தலைத் தடுப்பதிலும் நமது ஆயுதப் படைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.
மேலும், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பு திட்டங்களில் ஆயுதப்படைகளின் ஈடுபாடு, எங்கள் விரிவான ஆட்கடத்தல் எதிர்ப்பு மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நேற்று (ஜூன் 07) இடம்பெற்ற முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான ஆட்கடத்தலுக்கு எதிரான பயிற்சியின் ஆரம்ப உரை நிகழ்த்தும் போதே பாதுகாப்பு செயலாளரும் ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆட்கடத்தல் வலைப்பின்னல்களை கண்காணித்து அழிப்பதில் இராணுவ உளவுத்துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. "தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் புலனாய்வுப் பகிர்வு ஆகியவை இந்த கடத்தல்காரர்களுக்கு எதிரான நமது போராட்டத்தின் வெற்றியில் பெரிதும் செல்வாக்கு செலுத்தும்" என ஜெனரல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.
2021-2025 காலப்பகுதியில் இலங்கையில் ஆட்கடத்தலைக் கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல்திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலமர்வானது, தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் கடத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளைக் கையாளும் சர்வதேச சட்ட கட்டமைப்பைப் புரிந்துகொள்வதற்கான ஒரு பயனுள்ள தளத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரியா ஜயசுந்தர மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் ஆகியோர் முக்கிய வளவாளர்களாக கலந்து கொண்டு ஆட்கடத்தல் தொடர்பில் தெளிவான மற்றும் விரிவான புரிதலை வழங்கி விரிவுரைகளை வழங்கினார்கள்.
மேலும், சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வின் மூலம் குற்றங்களை திறம்பட எதிர்த்து போராட தேவையான அறிவும் இதன்போது வழங்கப்பட்டது.
பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான சிரேஷ்ட முப்படை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.