நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆகியோரின் நலன் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து ஆராயும் 6வது நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது

ஜூன் 08, 2024
  •     'உறுமய' காணி உறுதி வழங்கும் திட்டத்தில் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முன்னுரிமை.
  •    சேவையில் ஈடுபட்டுள்ள மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு மானிய வட்டி விகிதத்தில் சிறப்புக் கடன் வசதிகல் வழங்கப்படவுள்ளதுடன், ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடன்களின் மீதான அதிகரித்த வட்டி விகிதங்களை குறைக்கவும்  முன்மொழியப்பட்டுள்ளது.
  •   வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டத்தில் ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 25% வேலைவாய்ப்புக்கள் ஒதுக்கீடு.

ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் போரில் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை ஆராயும் வகையில் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு நிகழ்வு இன்று (ஜூன் 08) மின்னேரிய காலாட்படை பயிற்சி முகாமில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை இராணுவத்தின் கிழக்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க வரவேற்றார்.

குறிப்பாக பொலன்னறுவை மாவட்டத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கும் தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்கும், இராணுவத் தலைமையக இயக்குநரகங்களின் கீழ் உதவி மையங்களை நிறுவியதுடன் குறித்த இராணுவ வீரர்கள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும பிரச்சினைகளை இதன்மூலம் நிவர்த்தி செய்துகொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் படைவீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் சபையின் தலைமையில் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் வரவேற்புரையை அதன் பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரோன் ஏக்கநாயக்க நிகழ்த்தினார்.

இதன்போது உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் தென்னகோன், போரின் போது போர்வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆற்றிய மகத்தான தியாகங்களையும், தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்காகப் போராடிய எமது வீரமிக்க போர்வீரர்களின் உன்னத சேவையையும் பாராட்டினார்.

அத்துடன், அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின்போது அனர்த்த நடவடிக்கைகளுக்காக முப்படையினர் இரவு பகலாக உழைத்து இதுவரை ஆற்றிய அளப்பரிய சேவைக்கு அமைச்சர் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சு, ஆயுதப் படைகள், ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து சுகாதாரம், பொது நிர்வாகம், வங்கி மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் போது, போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான சேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் மற்றும் 'உறுமய' இலவச காணி உறுதி வழங்கும் திட்டத்தில் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், தற்போது வசிக்கும் நிலங்களுக்கு சிறப்பு பெயரளவிலான வரி ரூ.100.00 மட்டுமே விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் இலங்கை வங்கியின் தலைவர் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் துறை வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்ட நிலையில், விசேட கடன் வசதிகளை வழங்குவதற்காக முன்னர் பெறப்பட்ட கடன்களுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி விகிதங்கள் சேவையில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்து சலுகை அடிப்படையில் வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இலங்கை வங்கி ஏற்கனவே அந்த பிரேரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்து ஓய்வுபெற்ற படைவீரர்கள் மற்றும் போர்வீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 25% வேலை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி முதல் குழு இம்மாத இறுதியில் இஸ்ரேல் செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சரின் உரையைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்கள் தங்களின் குறைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இராணுவ அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், எதிர்காலத்தில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க விரும்பும் ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த படைவீரர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை இராஜாங்க அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்வில் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் E.M.D.S ஏக்கநாயக்க, இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.