பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விசேட பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில் ஆரம்பம்

ஜூன் 21, 2024
  • தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு ஹெமோடையலிசிஸ் சுத்திகரிப்பு இயந்திரம் பாதுகாப்பு செயலாளரினால் கையளிக்கப்பட்டது

பொசன் பௌர்ணமி தினமான இன்று (ஜூன் 21) தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்கள் மற்றும் போரில் காயமடைந்த வீரர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கவும், அத்துடன் அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வுகள் அநுராதபுரம் சந்தஹிரு சேயவில் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிகழ்வானது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு மற்றும் முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் ஆகியோரின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகாலை ஆரம்பமான நிகழ்வுகளின் ஒரு அங்கமாக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சத்திரசிகிச்சைப் பிரிவிற்கு ஹெமோடையலிசிஸ் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றை பாதுகாப்பு செயலாளர் கையளித்தார்.

சந்தஹிரு சேய அறக்கட்டளையின் நன்கொடை நிதி உதவியின் கீழ் மிகவும் தேவையான மருத்துவ உபகரணங்கள் பாதுகாப்பு செயலாளரினால் மருத்துவமனையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் பிரபாத் ஜெயக்கொடியிடம் கையளிக்கப்பட்டது.

தீகவாபிய விகாரையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட தீகவாபிய நினைவுச்சின்னங்கள் மற்றும் க்ரெஸ்ட் மாணிக்கம் ஆகியவற்றின் காட்சிப்படுத்தல் இன்று காலை சந்தஹிரு சேய வளாகத்தில் ஆரம்பமானது.

மேற்படி காட்சிப்படுத்தலானது, புனித நகரத்திற்கு வரும் ஏராளமான பக்தர்களுக்கு புனித நினைவுச்சின்னங்களை வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மேலும், இந்த புனித நினைவுச்சின்னங்கள் புத்தர் அறையில் கட்டப்பட்ட ரன்சிவிக்யாவில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த புனித நினைவுச்சின்னங்களை திங்கள்கிழமை (ஜூன் 24) வரை வழிபட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில, வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தினேஷ் நானயக்கார, வடமத்திய கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இராணுவ வழங்கள் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன், இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதர இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பெருந்தொகையான பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பக்தர்கள் சந்தஹிரு மஹா சே பொசன் வலயத்திற்கு வருகை தந்து மத அனுஷ்டானங்களில் ஈடுபடுவதோடு, வண்ணமயமான பந்தல், விளக்குகள், ஒளி அலங்காரங்கள், பக்தி கீ நிகழ்ச்சிகள் மற்றும் இலவச உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கும் தன்சல்கள் ஆகியவற்றை அனுபவிக்க அழைக்கப்படுகிறார்கள்.