பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விசேட பொசன் பௌர்ணமி தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில் ஆரம்பம்

ஜூன் 22, 2024
  • பாதுகாப்பு செயலாளர் ‘சந்தஹிரு மஹா சே பொசன் வலயத்தை’ ஆரம்பித்து வைத்தார்

சந்தஹிரு மஹா சே பொசன் வலயத்தின்’ ஆரம்ப நிகழ்வு (ஜூன் 21) வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுர புனித நகரத்தில் உள்ள சந்தஹிரு சேயா ஸ்தூபி வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன அவர்கள் பொசன் வலயத்தின் சம்பிரதாய ஆரம்பிப்பு நிகழ்வின் அடையாளமாக பந்தலின் மின்விளக்குகளை ஏற்றி வைத்தார்.

பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சந்தஹிரு மஹா சே பொசன் வலயத்தில்' 50 கண்கவர் ஒளியேற்றப்பட்ட அலங்கார விளக்குகள் மற்றும் முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அழகியல் திறன்களை வெளிப்படுத்தும் அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன.

சந்தஹிரு ஸ்தூபியைச் சுற்றியுள்ள புனித மைதானம் வண்ணமயமான ஒளி அலங்காரங்கள் மற்றும் பாரம்பரிய விளக்குகளால் ஒளிரப்பட்டுள்ளது.

இந்த கலாச்சார கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்களின் ஒன்றாக பாதுகாப்புப்படைகளின் கலாச்சார குழுக்களின் பக்தி கீ நிகழ்ச்சிகள் (சமய பக்தி பாடல்கள்) இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

சமய மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷேட பொசன் நிகழ்வுகளைக் காண வருகை தரும் பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்குவதற்கும், சமய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீகவாபிய மற்றும் சூடா மாணிக்கத்தின் கண்காட்சியும் சந்தஹிரு சேய வளாகத்தில் ஆரம்பமானது.

இந்த புனித நினைவுச்சின்னங்கள் புத்த விகாரையில் கட்டப்பட்ட ரஞ்சிவிகேயாவில் மத சடங்குகளுக்கு மத்தியில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன.

மேலும், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன அவர்களினால், தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சத்திரசிகிச்சைப் பிரிவிற்கு ரூபாய் 3.3 மில்லியன் பெறுமதியான ஹெமோடையலிசிஸ் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளர், பொசன் வலயத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் மூலம் சேகரிக்கப்படும் நிதி மற்றும் சந்தஹிரு சேய அறக்கட்டளை கணக்கிற்கான நன்கொடைகள் தூரப்பகுதிகளில் உள்ள சிறுநீரகம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நலனுக்காக பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

புத்த பெருமானின் போதனைகளை சுமந்து நாட்டிற்கு மகிந்த தேரர் வருகை தந்த வரலாற்று சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இலங்கை பௌத்தர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும்.

இந்த நாளானது நாட்டில் உள்ள பௌத்தர்களின் கலாச்சார மறுமலர்ச்சியை நினைவுகூருகிறது.

வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினர், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, முப்படைகளின் சிரேஷ்ட உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் நன்தன குலசேகர, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

மேற்படி பொசன் வலயமானது திங்கள் (ஜூன் 24) வரை தொடர்ந்து இடம்பெற்றவுள்ளதுடன், வருகை தரும் பக்தர்களுக்கு அவர்களின் வருகையை சமய மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அற்புதமான அனுபவமாக மாற்ற தேவையான உதவிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.