--> -->

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் 'சுரக்ஷா' கப்பலுக்கான 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதிரிப் பாகங்கள் கையளிப்பு

ஜூன் 21, 2024

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியக் கடலோரப் பாதுகாப்பு படையின் கப்பல் 'சாசெட்' கடந்த புதன்கிழமை (ஜூன் 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

மேற்படி இந்திய கப்பலானது, இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் 'சுரக்ஷா' கப்பலுக்கான 1.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய உதிரி பாகங்களை உத்தியோகபூர்வமாக வழங்கியது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு சந்தோஷ் ஜா மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சான்றிதழ் பரிமாற்ற நிகழ்வைத்  தொடர்ந்து குறித்த உதிரி பாகங்கள் முறைப்படி கையளிக்கப்பட்டன.

இந்த கப்பலானது, 2017 ஒக்டோபர் மாதம் இந்திய அரசால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு கடல் ரோந்துக் கப்பலாகும்.

இதற்கு முன்னர், 2021 ஜூன் மற்றும் 2022 ஏப்ரலில் இக் கப்பலுக்கான உதிரி பாகங்களை இந்தியா வழங்கியுள்ளதடன் மேலும் 2024 ஜனவரியில் ஹாலோன் சிலிண்டர்களை நிரப்புவதற்கான உதவியையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதில் இந்தியா நீண்டகால ஒத்துழைப்புக்களை வழங்கிவருவதுடன், இரண்டு கடற்படைகள் மற்றும் கடலோரப் பாதுகாப்பு படைகளுக்கு இடையே நட்புறவு மற்றும் இயங்குதன்மையை ஒருங்கிணைக்கிறது.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, மேல் மாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா, இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பூஜித விதான, 'ICGS Sachet' இன் கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.